ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முகாமைத்துவத்திற்கு நேரடி அரசியல் சாராதோரை நியமிக்கவும், கல்வித்துறை தொடர்புள்ளவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஆளுநருக்கு இன்று (19) அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை சட்டத்தின்படி இப்பணியகத்திற்கு முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாகாண அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுநரினால் இந்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.
பாலர் பாடசாலை பணியகத்தின் அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இப்போது பிரதேச சபையொன்றின் தவிசாளராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. கல்வி நிர்வாகத்தில் நேரடி அரசியல் தொடர்பு உள்ளவர்கள் இருப்பது பொருத்தமானதல்ல என்பதை தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்.
அதேபோல கல்வித்துறை தொடர்பில்லாதவர்கள் இப்பணியகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் சரியான நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பாலர் பாடசாலை ஆசிரியைகளும், உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைகள் தான் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலக் கல்வியை நிர்ணயிப்பவை. எங்களை விட கல்விப் பாண்டித்தியமும், கல்வி நிர்வாகத் திறனும் கொண்ட தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
எனவே, கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலை மாணவர்களின் உயரிய நலனைக் கருத்தில் கொண்டு பாலர் பாடசாலை பணியக முகாமைத்துவக் குழுவை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக இம்ரான் எம்.பி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


