(வாஸ் கூஞ்ஞ) 19.06.2025
மன்னார் மருதமடு திருப்பதி பல இலட்சக் கணக்கான மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருத்தளம். இந்த நாட்டின் இன நல்லுறவுக்கு வழிசமைக்கும் ஒரு தளமாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் இதற்கான ஆய்த்த கலந்துரையாடல் மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற பின் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நேசன் அடிகளார் ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்
மன்னார் மருதமடு அன்னையின் ஆடிப்பெருவிழா இவ்வருடமும் (2025) வழமைபோன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இதற்கான ஆய்த்தக் கூட்டம் நடைபெற்றது.
மருதமடு அன்னையின் இந்த ஆடிமாதப் பெருவிழாவை முன்னிட்டு ஆனி;மாதம் 23.06.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாட்கள் வழிபாடுகள் நடைபெறும்.
ஆடிமாதம் முதலாம் திகதி (01.07) மாலை 06 மணிக்கு ‘வெஸ்பர்’ ஆராதனையும் இதைத் தொடர்ந்து அடுத்தநாள் 02.07.2025 காலை 6.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
இந்த மருதமடு விழாவுக்கான ஆய்த்தக் கூட்டத்தில் மன்னார் ஆயர் கலந்து கொள்ள இருந்தபொழுதும் அவர் கலந்துகொள்ள முடியாத நிலை எற்பட்டாலும் அடுத்தக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மன்னார் மருதமடு திருப்பதி பல இலட்சக் கணக்கான மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருத்தளம். இந்த நாட்டின் இன நல்லுறவுக்கு வழிசமைக்கும் ஒரு தளமாக இருக்கின்றது.
இந்த திருத்தளத்pற்கு இந்த நாட்டிலுள்ள எல்லா மதத்தினரும் தமிழ் , சிங்கள மக்களும் ஒன்று சேர்ந்து வருகின்ற ஒரு பெரிய திருத்தளமாக இது அமைந்துள்ளது.
ஆகவே இந்த வருடமும் மக்கள் எவ்வித சிரமமின்றி இவ்விழாவில் பங்கேற்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கத்தோலிக்க திருச்சபையிலே கிறிஸ்து பிறந்து 2025 ஆண்டு யூபிலி ஆண்டாக இருப்பதால் இந்த ஆடிப் பெருவிழா ஒரு சிறப்பான ஆண்டாகவும் அமைந்துள்ளது.
ஆகவே மக்கள் இவ்விழாவுக்கு வருகை தந்து அன்னையின் ஆசீரை பெற்றுச் செல்ல வேண்டும் என வேண்டி நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.


