நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரபையில் எவ்வித கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் மாநகர முதல் மற்றும் பிரதி முதல்வரைக் தெரிவு செய்யும் முகமான முதல் அமர்வு இன்றைய தினம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சி ஆணையாளரால் மாநகர முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டு முதலாவதாக முதல்வர் தெரிவுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது மாநகர முதல்வராக சிரேஸ்ட ஊடகவியலாளரும், முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர உறுப்பினர் மா.சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் த.ரகுநாதன் வழிமொழிந்தார். ஏனைய தெரிவுகள் இல்லாதமையால் மாநகர முதல்வராக சிவம் பாக்கியநாதன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் பிரதி முதல்வருக்கான தெரிவுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது மாநரசபை உறுப்பினர் வை.தினேஸ்குமார் அவர்களை பிரதி முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் து.மதன் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் மீரா சாஹிபு ஆயிசா உம்மா வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து இன்னுமொரு தெரிவாக முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களை சுயேட்சைக் குழு உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் முன்மொழிய வி.சசிகலா வழிமொழிந்தார்.
இதன் பிரகாரம் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் வாக்கெடுப்பு இரகசிய முறையிலா, பகிரங்க முறையிலா என்பதற்கான உறுப்பினர்களின் விருப்பு கோரப்பட்டது. இதன் பிரகாரம் 22 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு விருப்பு தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் பிரதி முதல்வருக்கான வாக்கெடுப்பு பகிரங்க முறையில் இடம்பெற்றது.
அந்த வகையில் வை.தினேஸ்குமார் அவர்களுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், க.சத்தியசீலன் அவர்களுக்கு ஆதரவாக 04 வாக்குகளும் கிடைக்கபெற்றன. இதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 12 பேர் நடுநிலைமை வகித்தனர்.
இதன்படி மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதி முதல்வராக வை.தினேஸ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






