(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 09.06.2025
மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கில் புதிய ஆயரை வரவேற்றல் . உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கல் மற்றும் ஒரு வருட காலமாக பங்கில் கடமையாற்றி இடம்மாற்றம் செல்லும் உதவிப் பங்குத் தந்தைக்கு பிரியாவிடை ஆகிய முப்பெரும் விழாக்கள் இடம்பெற்றன.
ஞாயிற்றுக்கிழமை (08.06) மன்னார் மறைமாவட்டத்தின் முதிய பங்குகளில் ஒன்றான வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கிற்கு மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட புதிய ஆயர் மேதகு அ.ஞானப்பிரகாசம் ஆண்டகை முதல்முறையாக வங்காலைக்கு வருகை தந்தபோது அவருக்கு மாபெரும் வரவேற்பு நடைபெற்றது.
அடுத்து கத்தோலிக்க இறை மக்களுக்கு வழங்கப்படும் திருவருட் சாதங்களில் ஒன்றான உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் இப்பங்கிலுள்ள 77 இளைஞர் யுவதிகளுக்கு ஆயரால் வழங்கப்பட்டது.
இதன் நிறைவில் இந்த பங்கில் கடந்த ஒரு வருடமாக உதவிப் பங்குத் தந்தையாக கடமைபுரிந்து மாற்றலாகிச் செல்லும் அருட்பணி டிசாந்தன் அடிகளாருக்கு பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது
இந்த முப்பெரும் நிகழ்வுகளானது வங்காலை பங்குத் தந்தை அருட்பணி லக்கோண்ஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுகளில் குருமுதல்வர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் , மறைமாவட்ட ஆயர் இல்ல நிதி பொறுப்பாளர; அருட்பணி லீ. சுரேந்திரன் றெவல் அடிகளார் மற்றும் அருட்பணியாளர்கள் பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.


